மகாராஷ்டிரா அரசு உத்தரவு:
மும்பை: மகாரஷ்டிர மாநிலத்தில் இரவு பணிக்கு செல்லும் பெண்களின் பாதுகாப்பு கருதி அம்மாநில அரசு 17 கட்டுப்பாடுகளை மும்பை உயர் நீதிமன்றத்தில் பரிந்துரைத்துள்ளது.கடந்த 2007ம் ஆண்டு நவம்பர் மாதம் 1ம் தேதி புனேவில் ஒரு பிபிஓவில் பணிபுரிந்த பெண் ஒருவர் அலுவலக கேப் டிரைவர்களால் கற்பழிக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த புனே நீதிமன்றம் டிரைவர்கள் புருஷோத்தம் போரலே(26) மற்றும் பிரதீப் கோகடே(20) ஆகியோருக்கு மரண தண்டனை விதித்தது. இதை எதிர்த்து அவர்கள் மும்பை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்தனர்.
அந்த விசாரணையின்போது இரவு பணிக்கு செல்லும் பெண்களின் பாதுகாப்பு குறித்து நீதிமன்றம் கவலை தெரிவி்த்தது. இதையடுத்து மாநில அரசு பெண்களை இரவு பணிக்கு அமர்த்தும் நிறுவனங்கள் செய்ய வேண்டியவற்றை பட்டியலிட்டு 3 பக்க அறிக்கையாக நீதிமன்றத்தில் நேற்று சமர்பித்தது.
அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது,
இரவு 7 மணி முதல் மறுநாள் காலை 7 மணி வரை வேலை பார்க்கும் பெண்களின் வீட்டுக்கு சென்று அழைத்து வரவும், திரும்பவும் கொண்டு சென்றுவிடவும் நிறுவனத்தார் போக்குவரத்துக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். அந்த வாகன உரிமையாளர், டிரைவர் ஆகியோர் குறித்து போலீசார் விசாரித்த பிறகே அந்த டிரைவரை பணியமர்த்த வேண்டும்.
பயிற்சி அளிக்கப்பட்ட ஊழியர்களைக் கொண்டு கட்டுப்பாட்டு அறை அமைக்க வேண்டும். கேப் டிரைவர்கள் சம்பந்தப்பட்ட ஊழியையை நேரடியாக தொடர்பு கொள்ளாமல் கட்டுப்பாட்டு அறை மூலமே தொடர்பு கொள்ள வேண்டும். வாகனங்களுக்குள் இருப்பவர் வெளியே தெரியும் வகையில் கண்ணாடிகள் இருக்க வேண்டும். டாக்சிக்கு பதில் மினி பஸ்களை பயன்படுத்த வேண்டும்.
அனைத்து வாகனங்களிலும் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட வேண்டும். அலுவலக நுழைவுவாயில்களில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும். இது தவிர பெண் ஊழியைகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி அளிப்பதோடு அவர்களுக்கு மிளகுத்தூள் ஸ்ப்ரே கொடுக்க வேண்டும்.
இந்த கட்டுப்பாடுகளை மீறும் ஊழியர்கள் மீது சம்பந்தப்பட்ட நிறுவனம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment